Friday, November 20, 2009

தொழுவாளி..

எங்க ஊர்ல சின்ன வாண்டுகள்லேந்து பெரிய ஜியாண்டுகள் வரைக்கும் வாய் பேச்சு கிழியும் என்பது ஊரறிந்த உலகறிந்த செய்தி.

ஆனா எனக்கு தெரிந்த ஒருத்தர் ரொம்பவும் வித்தியாசமானவர், அவர் ரொம்ப அதிகப்படியா பேசுன வாத்தையே அஸ்ஸலாமு அலைக்கும் தான். அதுக்கு மேல யார்கிட்டேயும் அவர் பேசுனதே இல்லை. அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பார்.

தாடைல தாடி, தலைல தொப்பி, எப்போதும் வெள்ளை அரபி டிரஸ். ஒரு வக்துக்கு விடாம தொழுவ போறது. காட்டுபள்ளிக்கு அவர் ஊரில் இருந்த காலத்துல ஒரு சுபுஹ கூட தவற விட்டது கிடையாது.
அப்படியாபட்டவருக்கு காட்டுபள்ளியில அஸர் தொழுகைக்கு பிறகு நிகாஹ் நடந்தது. ரொம்ப ரொம்ப சிம்பிளான நபி வழி திருமணம்.

விஷயம் இது தான் அஸருக்கு பிறகு திருமணம் முடிந்து வீட்டுக்கு போனவர், மக்ரிப் பாங்கு சொல்றதுக்கு முன்னாடி எப்போதும் போல காட்டுபள்ளிக்கு தொழுவ கிளம்பிட்டார்.

இதை பார்த்த எங்களுக்கு ரொம்ப ஆச்சர்யமா போயிடுச்சு, என்னடா இது அவனவன் கல்யாணம் முடிச்சுட்டு நாப்பது நாளைக்கு ரூம விட்டு வெளிய வரமாட்டான், பொண்டாட்டியோட ரூம்லய சில்லா இருப்பான், அஸருக்கு இந்த பக்கமா வீட்டுக்கு போனார், மக்ரிபுக்கு அந்த பக்கமா தொழுவ போறாரே..?

எங்க ஊர் வாய் சும்மா இருக்குமா..? எங்க கூட்டத்துல ஒருத்தர் சொல்றார், 'மக்ரிபுக்கு போறாரு, சுபுஹுக்கு போவாரா..? - அது தான் முக்கியம்!'

Friday, November 06, 2009

நாகூர் ஆண்டவர் தியேட்டரில் கொடுக்கும் அதிரடி விமர்சனம்

படம்: தாலாட்டு பாடவா

எடுத்ததுமே அம்மாவுக்கு உடம்பு முடியாமல் இருக்கும், டாக்டரை கூப்டுங்கம்மா என்று படத்தில் சொல்வார்கள்.

நாகூரார்கள் கமெண்ட்: ராவுஜி கம்பவுண்டரையாவது கூப்டுங்க

படம்: தாய் மொழி

சரத்குமார் வாசற் படியில் முட்டிக் கொள்வார், அதை தொடர்ந்து நீண்ட பிளேஷ் பேக் காட்சிகள். சரியான போரடிக்கும் காட்சிகள்

நாகூரார்கள் கமெண்ட்: மறுபடியும் முட்டிக்காதே

Tuesday, August 25, 2009

டி.ஆர்.. தோத்தார்..

கம்பன் எக்ஸ்பிரஸில் எக்மோரில் எறங்குனதோட குபுகுபுன்னு ஆட்டோ ஓட்டுறவங்க எல்லாம் தர்ஹால சோத்து சீட்டு வாங்குற மாதிரி கூடிட்டாங்க..
அதுலேந்து ஒருத்தர தேர்ந்தெடுத்து அவர் பின்னாடியே போன ஒடனே ஆட்டோ காரர் கேட்டார், "எங்க சார்..?" என்று
நம்ம ஊர் ஆளு இப்படி கேட்டிருக்காஹா, "ஆட்டோ.. இங்கேந்து டிரிப்ளிகேனுக்கு போறதுக்கு என்ன ரேட்டோ?"

(விஜய) டி.ஆர். தோத்தார்

சஹனுக்கு டிக்கெட்

ஒரு தடவை நாகூராளு ஒருத்தரு நாகப்பட்டினத்துல கல்யாணம் பண்ணுனார். எங்க ஊர்லேந்து ஒரு 8 பேர் போல பஸ்ஸுல கிளம்பி போனாஹல்வோ.

கைலியும் தொப்பியுமா பஸ்ஸுல ஏறுனதோடவே கண்டக்டர் கேட்டுட்டார், "என்ன கல்யாணமா? சாப்பாடா? பிரியாணியா?, சரி, சரி, எத்தனை பேரு"ன்னு..

அதுக்கு நம்ம பேச்சுவாயன், "ரெண்டு சஹனுக்கு டிக்கெட் கொடுங்க" என்று கேட்டார்.

சஹன்னா என்னான்னு தெரியும் தானே, நாலு பேர் ஒண்ணா ஒக்காந்து சாப்புடுற பெரிய மரவ (தட்டு).

Monday, January 12, 2009

அறுவை

மீசையை சரி செய்கிறேன் என்று குரங்கு பங்கு பிரிச்ச கதையா இடது பக்கம் அதிகமாகி விட்டது என்று வலது பக்கம் சரி செய்ய வலது பக்கம் குறைந்து விட்டது என்று இடது பக்கம் சரி செய்ய இப்படியே சரி செய்து செய்து ஹிட்லர் ரேஞ்சுக்கு வந்து விட்ட மீசையை பார்த்தவுடன் இவருக்கு மூக்குக்கு கீழே கோபம் வந்தது.

அதே கோபத்தில் முழுதுமாக வழிக்கிறேன் என்று கடுப்பில் இழுத்திருக்கிறார். மீசையோடு கொஞ்சூண்டு சதையையும் அறுத்து விட்டிருந்தார்.

அன்று ஹஜ் பெருநாள். பள்ளியில் சந்திக்கும் போது மூக்குக்கு கீழே அறுத்திருப்பதை பார்த்த நண்பர் ஒருவர் இப்படி கமெண்ட் அடித்தார், "என்னாங்கணி, குர்பானிக்கு ஆட்ட அறுக்க சொன்னா நீம்பர் உம்பர் சதயவே அறுத்துக்கிட்டு வந்திருக்கீயோம்.. அவ்வளவு இபாதத்"

நண்பரின் கோபம்

நாகூர் நண்பர் ஒருவர் சிங்கையில் நிரந்தரவாச விசா (PR - Permanent Resident) வைத்திருந்தார். அப்போது அவர் மனைவியை சிங்கையில் சாதாரண விசாவில் (tourist visa) அழைத்து வந்திருந்தார். குறிப்பிட்ட நாள் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது. மனைவியை நிரந்தரமாக சிங்கையில் தங்க வைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தார்.

அப்போதெல்லாம், விசா வாங்குவது மிக மிக கடினம், சிங்கப்பூர் குடிநுழைவு துறை அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. கடும் வருத்தத்திலும், கோபத்திலும் என்னை சந்தித்த அவரை தேற்றினேன்.

அந்த கட்டத்தில் எனது இன்னொரு நண்பர் அந்த இடத்திற்கு வந்தார். வந்த நண்பரிடம் இந்த நண்பரை அறிமுகப்படுத்தினேன்.

வந்த நண்பர் கேட்ட முதல் கேள்வியே இது தான், "familyயோட இருக்கீங்களா..?"

மனைவியின் விசா கிடைக்காமல் கோபத்தில் இருந்த நண்பர் இப்படி பதில் சொன்னார், "இல்ல பே முழியோட இருக்கிறோம்.." என்று

ரெக்கார்ட் நோட் காணாமல் போனதற்கு கற்பிக்கப்பட்ட நியாயங்கள்

நாகூர் ஆண்டவர் தியேட்டரில் விக்ரம் படம் எடுத்திருந்தார்கள். பள்ளிகூடத்திற்கு போகாமல் படத்திற்கு போன ஒரு பிள்ளையாண்டான் ரெக்கார்ட் நோட்டை தொலைத்து விட்டான்.

அடுத்த நாள் ரெக்கார்ட் நோட்டை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும், அப்போது தான் அவனுக்கே தெரிந்தது, ரெக்கார்ட் நோட் காணாமல் போய் விட்டது என்று. கொஞ்சம் கூட பதட்டப்ப்டவில்லை. "நேத்து பட கொட்டாய்ல (ஒழுங்காக படிக்கவும் - சினிமா கொட்டகையை தான் பிள்ளையாண்டான் இந்த அழகுல சொல்றான்) தான் காணா போயிருக்கும்னு நெனைக்கிறேன்" என்று அலட்சியமாக கூறினான்

வாத்தியார் வந்தார். எல்லோரையும் சமர்ப்பிக்க சொன்னார், எல்லோரும் எழுந்து போய் வாத்தியாரின் மேசையில் வைத்து விட்டு வந்தார்கள்,

"யார் இன்னும் வக்கல..?" என்று கேட்டார்,

நம்ம பய எழுந்து, "நான் வக்கல சார்" என்றான்

"ஏன் வக்கல..?"

"காணா போய்டுச்சு சார்.." என்றான்

"ஏண்டா காணாடிச்சே?" என்று கேட்டார்

அதற்கு, "அதுக்கு என்னா சார் செய்றது, விக்ரம் படத்துல இந்தியாட ராக்கெட்டே காணா போயிடுச்சு" என்று நியாயம் பேசினான்

அவன் சொல்றதும் நியாயம் தானுங்களே..! நீங்க என்னா நெனைக்கிறீங்க..?

Wednesday, December 24, 2008

பள்ளிகூடத்தில்..

பசுமை நிறைந்த பள்ளி பருவங்களை மறக்கத் தான் முடியுமோ?, எங்க ஊரில் பள்ளிகூடத்தில் நடந்த சில கலாட்டாக்கள்...

எங்க ஊரு ஆசாமி ஒருவர் (நாந்தான்னு நினைக்கிறேன்) தொப்பி (அதாங்க முஸ்லிம்கள் தொழுகையின் போது அணியும் குல்லா என்றால் விளங்கும் தானே - (அல்லாஹ்வே! தொழுகையின் போது குல்லா அணிய தேவை இல்லை என்று யாராவது ஒரு சகோதரர் ஹதீதை கொண்டு வராமல் இருக்க வேண்டுமே!) - )அணிந்து கொண்டு பள்ளிகூடத்திற்கு போய் விட்டார்,

ஒரு மாற்று மத சகோதரர், 'நீங்க இப்படி தொப்பி போட்டுட்டு ஸ்கூலுக்கு வர்ரீங்களே?, இப்படி வரக்கூடாது.. இது மத உணர்வை ஏற்படுத்துது" என்று மிகுந்த நல்லெண்ணத்துடன் சொல்லி வைக்க,

நம்ம ஊர் ஆசாமி, "அப்ப நீங்க ஏன் திருநீறு பூசிட்டு வர்ரீங்க.. இது மத உணர்வை ஏற்படுத்தாம மத நல்லிணகத்தையா ஏற்படுத்துது..?" என்று ஒரு போடு போட்டாரே பாருங்கள்..

அந்த சகோதரர் கேட்ட அடுத்த கேள்வி என்னான்னு நினைக்கிறீங்க, "இந்த குல்லா எங்க வாங்குனீங்க, நல்லா இருக்கு.."

------------------------------------------------------------------------

ஆண்டவர் தியேட்டரில் ஒரு படம் மாற்றினால் அந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற கடமை உணர்வு வந்து விடும் எங்க ஊரு படிக்கிற பசங்களுக்கு,
அப்படி ஒரு தடவை ஸ்கூலுக்கு கட் அடித்து விட்டு படத்திற்கு போய் டிக்கெட் கிடைக்காமல் பூவா தலையா போட்டு பார்த்து கடற்கறைக்கு போவது என்ற தலை விழாததாலும் பள்ளிகூடமே போவது என்ற பூ விழுந்ததாலும் பசங்க சிங்க பாதையில் நடக்காமல் பூ பாதையில் பள்ளிகூடத்திற்கே திரும்பினர்,

காலம் தாழ்த்தி வந்து நிற்கும் பால் வடிகின்ற முகத்தை பார்த்து வாத்தியார், 'ஏண்டா லேட், எங்கே போனீங்க?' என்று கேட்டதற்கு

'சார், மாமியா வூட்டுக்கு போனோம், வூடு பூட்டியிருந்துச்சு அதான் லேட்" என்றதும்

தன்னை கூப்பிடாமல் விட்டுட்டு போன கோபத்தில் வகுப்பிலேயே இருந்த உயிர் தோழன் ஒருவன், 'சார் அவன் உங்கள வெடைக்கிறான் சார்" என்றதும் வாத்தியாருக்கு கோபம் தலைக்கேறி பிரம்பை தேட, பசங்க ஜூட், இந்த முறை உண்மையிலேயே மாமியார் வீட்டிற்கு..

---------------------------------------------------------------------------

வெள்ளிகிழமை ஜீம்மா தொழுகைக்கு போக வேண்டும் கொஞ்சமே கொஞ்சம் முன்னதாக சாப்பாடு நேரம் விட்டு விட வேண்டும் என்று பள்ளிக்கு போகாமல் அறப் போரில் (?) ஈடுபட்டது மாணவர் கூட்டம்.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கூட்டத்தில் அமைதியாகவும் புத்தகங்களை பவ்யமாகவும் வைத்துக் கொண்டு நின்றிருந்த ஒரு மாணவனிடம் ஒரு வாத்தியார், "ஓய்..! நீம்பர் சொல்லுங்கணி, ஜூம்மா முக்கியமா? படிப்பு முக்கியமா?" என்ற கேட்டவுடன்

அந்த புத்தக புழு இப்படி சொல்லியிருக்கிறது, "ஓய்..! ஜீம்மா தாங்கணி முக்கியம்" என்று

(என்னத்த பேசுறது..? - இது நான்)

Tuesday, November 25, 2008

கல்யாண கலாட்டா

ஒரு விபரமும் தெரியாதவர்களை எங்க ஊரில் "பேயன்" என்று மரியாதையாக (?) அழைப்பது வழக்கம். அப்படி ஒருவர் தனக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாகவும் எப்படி எப்படி நடந்துக்கணும் என்றும் கேட்டு தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு ஒரு குரூப்பிடம் தெரிவித்திருக்கிறார்.

அந்த கொடுமைக்காரர்கள், 'ஓய் ரொம்ப முக்கியம், கையழைச்சு வுட்டவொடனே, பொண்ணுட கைய புடிச்சிட்டு நல்ல சத்தமா மூணாம் கலிமாவ மூணு தடவ ஓதணும்.., அப்புறம் தாலி கட்டு அது இதுன்னு எல்லாம் முடிஞ்சு அறைக்குள்ள பொண்ணு வந்தவொடனே.." என்று நிறுத்தியிருக்கிறார்

"சொல்லுங்கணி, பயமா இருக்கு" என்று திட்டுகட்டு போய் கேட்டிருக்கிறார் அந்த மரியாதைக்குறியவர்

"அட போங்கணி, இப்ப அஞ்சாம் கலிமாவ அஞ்சு தடவ ஓதணும்.." என்று கூறியிருக்கிறார்

"அல்லாஹ்வே.. நான் என்னா செய்வேன், இந்த கல்யாணம் நிச்சயம் நடக்காது" என்று புலம்ப ஆரம்பித்து இருக்கிறார்

"ஏன்?" என்று ஆச்சர்யப்பட்டு கேட்க

"எனக்கு மூணாம் கலிமாவும் தெரியாது, அஞ்சாம் கலிமாவும் தெரியாது, கலிமா தெரியலைன்னா கல்யாணம் பண்ண முடியாதுன்னு (இதையே தலைப்பா வச்சிருக்கலாம்) இப்ப தான் தெரியும்" என்று சொல்லி மூணாம் கலிமாவும் அஞ்சாம் கலிமாவும் மனப்பாடம் செஞ்சு எல்லார்ட்டயும் சொல்லி காண்பித்து இருக்கிறார்.

பாருங்க ஒரு ஆள் கலிமாவ மனப்பாடம் செய்ய வைக்க என்னென்ன பொய் சொல்ல வேண்டியிருக்குது.

கல்யாணத்துக்கு முதல் நாள் அந்த கொடுமைக்கார குரூப்பிடம், "ஏங்கணி எடைல ஏதாவது உட்டுட்டா பிரச்சினை வந்துடாதுல்ல.." என்று கேட்டிருக்கிறார்
(இதில் ரெட்டை அர்த்தம் கண்டுபிடிப்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்)

கேள்வியும் பதிலும்

எங்க ஊர்லங்க, ஒழுங்கா பள்ளிவாசலுக்கு தொழுவ போறவன் கூட தப்லீக் ஜமாத் பள்ளிவாசலுக்கு வந்துட்டாஹன்னா, அந்த பள்ளி பக்கமே போவ மாட்டாங்க, என்ன செய்றது?, காலம் அப்படி இருக்கு! இந்த பதிவு தப்லீக் ஜமாத் செய்வது சரியா? தவறா? என்று போலீஸ், வக்கீல் மாதிரி ஆதாரத்தை எடுத்து வைத்து பேசும் பதிவு அல்ல.
இந்த பதிவு தப்லீக் ஜமாத்தார்கள் எங்க ஊர்வாசிகளை தொழுகைக்கு அழைத்த போது அவர்களுக்கு கிடைத்த பதில்கள் பற்றியது.
-----------------------------------------------------------------
"பள்ளிவாசலுக்கு வாங்க.."

"என்ன இப்படி சொல்லிட்டீங்க, நான் தான் கண்டிப்பா வருவேனே"

"எப்போ?""

"பெருநாக்கு (ஹி.. ஹி..)"
------------------------------------------------------------------
"பள்ளிவாசலுக்கு வாங்க"

"பார்க்கறேன்"

"அப்படி சொல்ல கூடாதுங்க, நம்ம மௌத் எப்பன்னு நமக்கு தெரியுமா?"

(பதில் சொன்னவர் இப்போது ஹயாத்தோடு இல்லை) "அது எப்டிங்க தெரியும், அது தெரிஞ்சா தான் அவனவன் தன்னையே "அல்லாஹ்"ண்டுடுவானே"

"அஸ்தக்பிருல்லாஹ்...!"
--------------------------------------------------------------------------

"ஏன் மக்ரிபுக்கு வரலே?"

"நீங்க அஸருக்கு வந்து கூட்டிட்டு போனீங்களா?, அத மாதிரி மக்ரிபுக்கும் வருவீங்கன்னு வீட்ல தான் காத்துகிட்டிருந்தேன், ஆமா ஏன் வரல..?"

பதில் இல்லை
--------------------------------------------------------------------------
"தொழுகைக்கு வாங்க"

"உங்களுக்கு எந்த ஊரு?"

".." ஊர் பேர் சொல்லப்படுகிறது

"உங்க ஊர்ல ஒவ்வொரு வக்துக்கும் வீடு வீடா போய் கூப்பிடுவீங்க்களா..?, எங்க ஊர்ல எல்லாம் பாங்கு சொல்வாஹா..!"

"..."
----------------------------------------------------------------------------

இப்ப சொல்லுங்க, எங்க ஊர்ல எல்லாரும் நல்ல மரியாதை தெரிஞ்சவங்க தானே?

நாகூர் அம்ஜத்கான்

விக்ரம் படம் நாகூர் ஆண்டவர் டாக்கீஸில் ஓடிய போது அம்ஜத் கான் அறிமுகமான காட்சியில் இஹ பேரை சொல்லி தான் தியேட்டர்ல கத்துனான்வோ.

இஹ என்று நான் குறிப்பிட்டிருக்கும் அந்த நபர் இப்போது நம்மிடையே இல்லை என்றாலும், இ(ஹ)வர்கள் பள்ளிவாசலில் பயான் செய்யும் போது ஒரு சம்பவம் நடந்தது. பொதுவாக இன்னைக்கு பயான்ங்குறது நரகத்த சொல்லி பயமுறுத்துறது இல்லைன்னா சொர்க்கத்துக்கு ஆசை காட்டறது இந்த நிலையோட நின்று விடுகிறது.

அப்படி தான் ஒரு முறை ஆவேசமாக, 'தொழுவுனீங்க.. உங்கள "வாங்க வாங்க"ன்னு சொல்லி சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போவாங்க, தொழுவல.. உங்கள "தர தர"ன்னு நரகத்துக்கு இழுத்துட்டு போவாங்க" என்று எச்சரித்ததும்,

"அப்ப எங்களுக்குல்லாம் "வாங்க வாங்க"வா? இல்ல "தர தர"வா" ண்டு ஒருத்தர் குழப்பத்தோடு கேட்க

கோபத்துல நாகூர் அம்ஜத்கான் "தூ"ன்னு காரி துப்பிட்டாஹலாம்

அஹலுக்கு "வாங்க வாங்க" கிடைக்கணும்னு இந்த நேரத்துல நான் துவா செஞ்சுக்கிறேன்.

Sunday, November 23, 2008

சட்டை புடிக்குதுன்னா என்னா அர்த்தம்

எங்க வாப்பாவும் இஜட்.ஜபருல்லாஹ் அவர்களும் ஒன்றாக படித்தவர்கள். நெருங்கிய தோழர்கள். என்றாலும், நான் இஜட். ஜபருல்ல்லாஹ் அவர்களை "தோழாப்பா" என்று அழைத்தது கிடையாது. "ஜபருல்லாஹ் நானா" என்று தான் அழைத்து வந்திருக்கிறேன். எங்க வாப்பா இவர்களின் நகைச்சுவை உணர்வை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள்.

நண்பர் ஒருவருக்காக அவர் வைத்திருந்த துணி கடையில் ஜபருல்லாஹ் நானா அவர்கள் நின்று வியாபாரம் செய்து கொடுப்பது வழக்கம்.

அப்படி ஒரு முறை கடையில் நின்று வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, ஜபருல்லாஹ் நானா அவர்களிடம் சட்டையை வாங்க வந்த ஒருவர், 'இத போட்டு பாக்கலாமா?" என்று கேட்டிருக்கிறார்.

"பாருங்களேன்.." என்று சொல்லபட்டிருக்கிறது

சட்டையை போட்டு பார்த்திருக்கிறார், உடம்பை இறுக்கி பிடித்து ரொம்ப பி(f)ட்டாக இருந்திருக்கிறது. ஒருவர் சட்டையை இறுக்கமாக போட்டிருந்தால் நாம்,"உடம்ப பி(f)ட்டுனு புடிச்சுகிட்டு இருக்குன்னு" சொல்வது வழக்கம்.

அவர் உடனே, "புடிக்கிதுங்க.." என்று சொல்லியிருக்கிறார்

அதற்கு ஜபருல்லா நானா அவர்கள், "புடிக்கிதுன்னா இதையே எடுத்துக்குங்க.." என்று சொன்னது தான் தாமதம் கடை சிரிப்பில் கலகலத்து விட்டது.