நாற்காலி

நான் செட்டியர் ஸ்கூல்ல ரெண்டாவது படிச்சிகிட்டிருந்தேன். வாத்தியார் பேர் தெரியலை. ஆனாக்கா 'செவுட்டு வாத்தியார்' என்று தான் கூப்பிடுவோம். அவருக்கு காது அவ்வளவா கேட்காது அல்ல அவ்வளவும் கேட்காது. வாத்தியார்களுக்கு பல பேர் இப்படி மாணவர்கள் வைப்பதுண்டு. ஒரு வாத்தியாருக்கு 'போண்டா சார்' என்று கூட பெயரிருந்தது. அவர் போண்டா பிரியமா சாப்பிடுவாரா? அல்லது போண்டா மாதிரி இருப்பாரா? அல்லது இரண்டுமேவா? என்றெல்லாம் ஞாபகமில்லை.

இத எழுதிக்கிட்டு இருக்கும் போது மஞ்சக்கொல்லைல கிட்டதட்ட எல்லா வீடுகளுக்கும் ஆளுங்களுக்குமே கூட இப்படி ஒரு பட்டப் பேரிருக்கும். அப்படி அந்த ஊரு ஒருத்தருக்கு வாரி(றி) வழங்கிய பேரு 'அறிவாளி'. 

அந்த 'அறிவாளி' ஒரு முறை வெளியூரில்  (நாகூர்ன்னு வச்சுக்குங்களேன்) வசிக்கும் ஒருத்தருக்கு ஒரு வேலை விஷயமா போன் பேசியிருக்கிறார்.

போனை வேறு யாரோ எடுத்திருக்கிறார்கள். போனை எடுத்த அந்த நபரும் இவர் பேச நினைத்த நபரும் சிவசேனாவும் ஷாருக்கானும் மாதிரின்னு வச்சுக்குங்க, அவருகிட்டே தான் இவர் பேசியிருக்கிறார்.

'இன்னவர் இருக்கிறாரான்னு?' நம்ம அறிவாளி கேட்டிருக்கிறர்,

போனை எடுத்தவர் தொடர்ந்து கடுப்புடனே பேசியிருக்கிறார், 'அவன்லாம் இல்லை'

'வந்தா நான் பேசுனேன்னு சொல்லுங்க..'

அவர், 'நீங்க யாருன்னு சொல்றது?' என்று கேட்டிருக்கிறார் 

அறிவாளி சொல்லியிருக்கிறார், 'நானா..?'

அவர், 'ஆமா.. ஆமா..'

அறிவாளி, 'நா அறிவாளின்னு சொல்லுங்க அவருக்கு தெரியும்...' என்றிருக்கிறார்

அவர், '(கடுப்புல கெட்ட வார்த்தையை சொல்லிட்டு) அப்ப நாங்க என்ன முட்டாளா?' என்று கேட்டுட்டு போனை அறைந்திருக்கிறார்.

இந்த டைரி குறிப்பு 'செவிட்டு சார்' என்ற பட்டப் பெயரை வைத்து மாணவர்கள் என் வாத்தியாரை கிண்டலடித்தது பற்றியது அல்ல. சொல்ல வருவது வேறு விஷயம்..

நான் ஒரு முறை எனது தம்பி தாஜையும் எனது மச்சான் ஜெஹபரையும் பள்ளிகூடத்துக்கு கூட்டிட்டு போயிருந்தேன். செவிட்டு வாத்தியார் இன்னும் வரவில்லை. அதுக்கிடையில் தாஜுக்கும் ஜெஹபருக்கும் சரியான சண்டை. கட்டிகிட்டு உருளுகிறார்கள். 'நான் தான்..' 'நீ தான்' என்று பயங்கர சண்டை. 

நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன். முடியலை. எனக்கு வாத்தியார் வந்துட போறார் என்ற பயம் இருந்தது. அவர் வந்தவுடன் இன்னும் பயம் இன்னும் உச்சத்துக்கு எகிறியது..

செவிட்டு வாத்தியார் அமைதியாக, 'யேய்.. ஏன்ப்பா சண்டை போடுறீங்க.. சண்டை போட கூடாது.. பேசாம எடத்துல போய் உக்காருங்க..' என்று சண்டைய தடுத்தார்.

நான் குறுக்கிட்டு, 'சார், அதுல தான் சார் சண்டையே.. யார் ஒக்கார்ரதுன்னு..' கத்தினேன் நான்

'ஒவ்வொரு ஆளா ஒக்காருங்க.. மொதல்ல நீ ஒக்காரு.. (என்று தாஜ் பக்கம் கையை காட்டி விட்டு) அப்புறம் நீ ஒக்காரு (என்று ஜாஃபர் பக்கம் கையை காட்டினார்..'

'வேணாம் சார்..' கதறினேன் நான்

'ஏன் வேணாம்.. நீ சும்மா இரு.. போய் ஒக்காரு.. ஆமா எங்கே ஒக்கார போறே..' என்று கேட்க

ஜாஃபர் அவசர அவசரமாக கையை நீட்டினான், 'அங்கே தான்..' என்று.

திரும்பி பார்த்தாரு.. அது அவர் உட்கார்ர நாற்காலி.

அன்னைக்கு பூரா நிண்டுகிட்டு பாடம் நடத்துன வாத்தியாரு கடைசியா போவும் போது என்னய தனியா கூப்ட்டு, 
'கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன்.. தயவு செய்து இந்த ரெண்டு பேரையும் மட்டும் இனிமே கூட்டிட்டு வந்துடாதே..' என்று எப்போதுமே கத்தி பேசும் அவர் அந்த செய்தியை மட்டும் மெதுவாக தான் சொன்னார்.

Comments

Popular posts from this blog

முதல் இரவு கலாட்டா

பள்ளிகூடத்தில்..

மைத்தாங்கொல்லை