கதவு

வாசல் கதவு உள் பக்கமாக தாழிட்டு இருந்தது. வீட்டின் வாசலில் உள்ள அழைப்பு மணியை அழுத்தி விரலில் உள்ள 'வி'யும் 'ர'வும் போயே போய் விட்டது. கதவை ரொம்ப நேரமாக தட்டியும் திறந்த பாடில்லை. 

எங்க மாமா மிகவும் கோபக்காரர். எங்க மாமாவிற்கு பிடிக்காத பழமொழி அல்லது சொல்மொழி 'தோலுக்கு மேலே வளர்ந்துட்டா பெத்த புள்ளைங்க கூட தோழர்கள் அல்லது தோழிகள்' என்பதாகும். பிடித்த பழமொழி 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி மாமன் மச்சான் கூட உதவ மாட்டான்' என்பதாகும்.

அதனால் பிள்ளைங்க எல்லாம் பயந்து நடுங்குங்க.. இப்போது அவர் தான் கதவை தட்டிக் கொண்டிருக்கிறார். 

கேள்வி: யார் வீட்டு கதவை?  - 
பதில்: அவர் வீட்டு கதவை தான்.

என் மாமாவின் மகனார் இருக்கிறாரே, அவர் பத்தாவது பரீட்சை எழுதியிருந்தார். அவர் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரவேண்டும் என்று கண்டிப்பாக கறாராக கட்டளையிட்டிருந்தார்கள் எங்கள் மாமா. 

அன்னாருடைய மகனோ, 'வாப்பா ஸ்டேட் ஃபர்ஸ்ட் ரொம்ப கஷ்டம் வாப்பா.. இருந்தாலும் நான் முயற்சி பண்றேன்.. எப்படியும் ஸ்கூல் ஃபர்ஸ்ட்டாவது வாங்கி காட்டுறேன்' என்று சவால் விட்டிருந்தார். 

அவர் இதுவரை விட்ட எந்த சவாலிலும் தோற்றதாக சரித்திரமே இல்லை. அவ்வளவு ஏன்..? இதுவரை அவர் எந்த சவாலுமே விட்டதாக கூட சரித்திரமே இல்லைன்னா பார்த்துக்க வேண்டியது தான்.

எங்க மாமா அவர்களின் வீட்டின் கதவை தட்டிக் கொண்டிருக்கும் அந்த நல்ல நாளின் காலையில் தான் ரிசல்ட் வந்திருந்தது. மரைக்காயர் அதான் எங்க மாமாவின் மகனார் பரிச்சையில பெயிலாகி இருந்தார். அதிகமில்லை ஜெண்டில்மேன். ஒரே ஒரு சப்ஜெக்டில் தான் அப்படி பெயிலாகி இருந்தார்.

இப்போது வாசலில் இருந்த அனைவருக்கும் ஒரு சந்தேகம் வந்து விட்டது, புள்ளை அடிக்கு பயந்தோ அல்லது அவமானத்துலேயோ ஏதாவது ஒண்ணுகெடக்க ஒண்ணு செஞ்சிருக்குமோ என்பதே அது. 

எல்லோரும் அழுது புலம்ப எங்க மாமா உள்பட தெருவாடிகளில் பலர் எல்லோரும் ஓட்டின் மீது ஏறி கொல்லை வழியாக குதித்து இரண்டு நாளைக்கு முன்னாடி ஆயிரங்கணக்கா செலவு பண்ணி மாட்டின கதவை கஷ்டப்பட்டு உடைச்சு எல்லோரும் உள்ளே போய் பார்த்தா..

உள்ளே போய் பார்த்தா பத்தாவது பரீட்சையில ஃபெயிலான புள்ளை படுத்து தூங்கிட்டு இருக்கு உள்ளே..

எங்க மாமா அடிச்சாரு தான், ஆனா பரீட்சையில ஃபெயிலானதுக்கு கூட இல்லை, தூங்கிட்டிருந்த அவரை எழுப்பி விட்ட உடனே அவர் சொல்லியிருக்கார், ' இதுக்காக ஏன் புது கதவை உடைச்சீங்க.. வாசல் கதவை உடைச்சிருக்கலாம்ல.. அது தான் பழசு.." என்றிருக்கார் என்னோட சூப்பர் மச்சான்..

Comments

Popular posts from this blog

முதல் இரவு கலாட்டா

பள்ளிகூடத்தில்..

மைத்தாங்கொல்லை