குழந்தையின் வயது

குரான் ஓதி கொடுக்கும் சாபு ஒருவர் வாஞ்சூர் (நாகூரின் எல்லையில் இருக்கும் பாண்டிச்சேரி மாகாணத்தை சேர்ந்த ஊர், டாஸ்மார்க் சமாச்சாரங்களுக்கு பிரசித்தம்)சென்று பஜர் (அதிகாலை நேர தொழுகை) தொழுது விட்டு ஜியாரத் (புனிதமான இடங்களை சந்திப்பது) செய்து விட்டு திரும்பும் வழியில் ஒரு வீட்டு வாசலில் நண்பர் இருக்கவே அவரிடம் சலாம் சொல்லி பேசியிருக்கிறார்.

அந்த வீட்டுக்குறிய நண்பர் 'வூட்டுக்கு வந்துட்டு போங்க' என்று வற்புறுத்தவே உள்ளே சென்று இருக்கிறார். பச்சை குழந்தை அழும் சத்தம் கேட்டு இருக்கிறது,

சாபு உடனே, 'யார்ர கொழந்த?' என்று கேட்டிருக்கிறார்,

அதற்கு அவர், 'தங்கச்சி கொழந்த சாபு' என்று சொல்ல

'எத்தனை மாசம்?' என்று எதார்த்தமாக கேட்டு வைக்க

அவர், 'பத்து மாசம் இருக்குமே..' என்று பதிலளித்திருக்கிறார். அதன் பிறகு சிறிது பேசி விட்டு 'அப்ப வர்ரேன்' என்று விடைபெற்ற அந்த சாபு தெரு முனை வரைக்கும போய் விட்டார்

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த அவர் (அதான் அந்த வீட்டிற்குறிய நண்பர் என்று எழுதியிருந்தேன்ல அவரே தான்), 'சாபு, சாபு' என்று கைதட்டி கத்தி கூப்பிட

சாபு, 'இல்லை வாணா, பரவாயில்லை, இருக்கட்டும், நான் தேத்தணி குடிச்சிட்டேன், தேத்தணி குடிச்சிட்டேன்' என்று சொல்லிக் கொண்டே ஏதோ தேத்தணி தான் போட்டு கொடுக்க போகிறார்கள் என்று நினைத்து சொல்ல,

'அது இல்ல சாபு இங்க வாங்க சொல்றேன்' என்று கத்தி கூப்பிட

வேறு வழியில்லாமல் சரி தேத்தணி தான் குடித்து விட்டு போவோமே என்று தெரு முனை வரைக்கும் போய் விட்டு திரும்ப வந்த சாபுவிடம்,

அவர், 'ம்மாட்ட கேட்டேன், புள்ளக்கி பத்து மாசம் இல்லையாம் சாபு, நேத்தோட பதினோரு மாசமாம்,தப்பா சொல்லிட்டேன் சாபு, அதான் கூப்பிட்டேன்' என்றார்.

சாபு வந்த ஆத்திரத்தை முகத்தில் சரியாக பார்க்க முடியாமல் தாடி மறைத்து விட்டது. இனிமே சாபுவிடம் தேத்தணி குடிக்கிறீங்களா என்று யார் கேட்டாலும் காத தூரம் ஓடுவதாக காதோரம் வந்த செய்தி ஒன்று சொல்கிறது

Comments

Popular posts from this blog

முதல் இரவு கலாட்டா

பள்ளிகூடத்தில்..

மைத்தாங்கொல்லை